சுல்த்தான்பேட் மறைமாவட்ட மேதகு ஆயரின் தவக்கால மேய்ப்புப் பணி மடல்  2018

 

அன்பார்ந்த குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் தவக்கால அருளோடுகூடிய எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மனமாற்றத்தின் காலமான தவக்கலத்தை நாம் துவங்கியிருக்கிறோம். இது செபத்தின் காலம், நோன்பின் காலம், இரக்கசெயல்களின் காலம். அத்துடன் கடந்த கால தவறுகள், பாவங்கள், பலவீனங்கள் போன்றவற்றை நினைத்துப்பார்த்து அவற்றுக்கான மனம்வருந்தும் காலமும் இதுதான். அதே நேரத்தில் நம் ஆணடவர் இயேசுவின் அடிச்சுவட்டில் நம்மை மேலும் அர்ப்பணித்துகொண்டு நம்பிக்கையோடு வாழும் மனநிலையை உண்டாக்கும் காலமும் இதுவே. இயேசுவின் அடிச்சுவட்டில் நடந்து நல்ல மனிதர்களாக நாம் வாழ இந்த தவக்கலத்தில் பலவிதமான செபம், தபம், நோன்பு-முயர்ச்சிகளையும் நாம் எடுப்பது வழக்கம். நம்முடைய இத்தகைய முயற்ச்சிகளில், “ நீங்கள் உங்கள் உடைகளை கிழித்துகொள்ள வேண்டாம் இதயத்தை கிழித்துகொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பிவாருங்கள்.” (யோவே 2:12) என்று இறைவாகினர் யோவேல் கூருவதை மனதில் கொள்ளவேண்டும்.

செபமும் நோன்பும்

இறைவனோடும் அதுவும் குறிப்பாக நம் ஆண்டவர் இயேசுவோடும் நம்மையே ஒன்றித்துகொள்வதற்க்கு செபம் நமக்கு உதவியாயுள்ளது. நாம் செய்கின்ற சிலுவைப்பாதையும் தியானமும் இயேசுவின் பாடுகளில் நம்மையே இணைத்துகொள்ள உதவுகிறது. நம்முடைய மனித எண்ணங்களும்

செயல்பாடுகளும் பொதுவாக தீமையை நோக்கி செல்கின்ற நிலையில்               ( தொ.நூ 6:5) நம்முடைய மனித மாண்பினை  அதாவது கடவுளின் சாயலாக நாம் படைக்கப்பட்டிறிக்கின்ற மகத்துவத்தை செபத்தின் மூலம் பெற்றுகொள்கிறோம். நம்மிடம் ஊறிப்போயிருக்கின்ற பொய்யான நம்பிக்கைகளையும், பாவங்களையும் நாம் இத் தவக்கல செபத்தின் வழியாக போக்கிகொள்ள முடிகிறது. இதற்க்கு நாம் செய்கின்ற தொண்டுகள் உறுதுணையாய் இருக்கின்றன.

அன்பார்ந்தவர்களே ! நோன்பு பற்றிய கிறிஸ்துவின் போதனையை நாம் தெளிவுர அறிந்து கொள்வது அவசியம், நாம் விரும்புகின்ற அல்லது ஆடம்பரமாக தோற்றம் அளிக்கின்ற விருந்து, உடையலங்காரம் போன்றவற்றை தவிர்ப்பதையும் இன்னும் குறிப்பாக இறைச்சி மற்றும் மீன் போன்ற வகைகளை தவிர்ப்பதையும், பொதுவான உடையை தவிர்த்து காவியுடையை சிலர் உடுத்துவதையும் பொதுவாக நாம் நோன்பு என்று கருதுகிறோம். ஆனால், நோன்பின் முதல் கட்டமே அது! நோன்பின் வெளியடையாளங்களே இவை ! என்னுடைய உடலையும் உள்ளபோக்கினையும் ஒடுக்கிகொண்டு கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்க்கின்ற மனநிலைக்கு (கொலோ 1:24) நாம் செய்கின்ற நோன்பு இட்டுச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட நோன்புதான் நம்மிலிருக்கும் சுயநலம், அஹங்காரம் போன்ற தீய குணங்களை அகற்றுவதற்க்கு வழியாயுள்ளது என்று நமது திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதை நினைவில் கொள்வோம். இதுதான் நோன்பின் இரண்டாம் கட்டம்.

          இந்தத் தவக்கலத்தில் நாம் செய்யவேண்டிய இரக்க செயல்கள் நோன்பின் மூன்றாவது கட்டமாகும். இரக்கசெயல்கள் என்றவுடன் தர்மம் செய்வதே

நம்முடைய கண்முன் நிற்க்கின்றது, உண்மைதான். இக்காலத்தில் தேவையிலிருப்போருக்கும், அவதிப்படுவோருக்கும் பொருளுதவியை தாராளமாக செய்ய முன்வருவோம். ஆனால் சகோதர சகோதரிகாளே, நம்முடைய இரக்கச் செயல்களில் மற்றொரு கோணமும் உண்டு. நம்முடைய பொருளுதவியைவிட பெரும்பாலான மக்கள் நம்மிடம் எதிர்பர்ப்பது நம்முடைய உறுதுணையும், ஆதரவான, ஒத்துழைப்பும், நாம் கொடுக்கும் ஊக்கமும்தான். நம்முடைய குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருசிலர் தனிமையிலும், கொடிய வியாதியிலும் வாழ்வார்கள். அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதும், தங்கள் குடும்பபிரட்சனைகளால் மன அழுத்தம் கொண்டு சிலர் நம்மிடையே வாழ்பவர்களுக்கு நாம் ஆறுதலாளிக்கும் மருந்தாகவும், உற்சாகமளிக்கும் நம்பிக்கையாக இருப்பதும் நம் தவக்கால செப நோன்பாகும்.

இயேசுவின் பாதையில் நாம்

சகோதர சகோதரிகளே, மேலே கூறப்பட்டுள்ள முறையில் நம்முடைய தவக்கால நோன்பு செபத்தை செய்யும்போது நாம் இயேசுவின் பாதையில் நிலைதடுமாறாமல் நடக்க வழியுண்டு. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யாரென்று நாம் கேட்டால் அவரே கூருகிறார், “நானே உலகின் ஒளி,” “நானே வழியும், வாழ்வும்” என்பது மட்டுமல்ல; மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கி புரிந்துகொள்ளும் முறையில், “நானே நல்ல ஆயன்” என்று கூறினார் (யோவா 10:11). ஏழைகள், சிறைபட்டோர், பார்வையற்றோர், ஒடுக்கப்பட்டோர், போன்றோருக்கு வாழ்வு அளிப்பவராகவும் (லூக் 4:18,19) தன்மேல் நம்பிக்கை கொண்டவர்களை எப்போதும் காப்பாற்றும் நல்ல ஆயனாகவும் இயேசு வாழ்ந்துகாட்டினார். மேலான மீட்பின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்து விளைச்சல்

அளிப்பதுபோல” (யோவா 12:24), ஒரு நல்ல ஆயனாக இருந்து தன் உயிரையே நமக்காக கையளித்து (யோவா 10:15), நமக்கு வாழ்வாக இன்று விளங்குகிறார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் மேற்கொண்டது சிலுவைப்பாதை. அவர் எடுத்துகொண்டது சிலுவை மரம், அவர் அடைந்தது சிலுவை மரணம். ஆனால் அன்பார்ந்தவர்களே அவர் நமக்கு விட்டுசென்ற உயிர்ப்பு வாழ்வு இத்தகைய நம் மீட்பராம் இயேசுவின் சிலுவைப்பாதையில் நடக்க இந்த தவக்காலம் நம்மையும் அழைக்கிறது.

          சாத்தானின் பலவித தீய சக்திகளுக்கெதிராக போராடிய புனித பவுல், “நான் நன்மைசெய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது.” (உரோ 17:14,21). என்று கூறினார். இயேசுவில் மனித பலவீனத்திலும் பாவத்திற்கு அடிமையாகவும் வாழ்ந்த புனித பவுல் இயேசுவின் சிலுவைப்பாதையில் நடக்கத் துடங்கினார். யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருந்த சிலுவை அவருக்கு கடவுளின் வல்லமையாகவும் ஞானமாகவும் தோன்றியது (1 கொரி 1: 18,24). எனவே, அவர் இயேசுவை பற்றி போதிக்க துவங்கியபோது சிலுவையில் அறையுண்ட இயேசுவைத்தான் போதித்தார். இயேசுவின் சீடராக இருந்த காரணத்தினால் துன்புறுத்தப்பட்டார், அவமதிக்கப்பட்டார், பட்டினி,தாகம் ஆடையின்றியிருத்தல், பழிக்கப்படுதல் போன்ற பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு தாங்கிகொண்டு, இயேசுவின் சிலுவைப்பாடுகளை தன் உடலில் தாங்கி வாழ்ந்தார் (கொலோ 1:23).  எனவே இறுதிவரை தன் விசுவாசத்தை காத்துகொண்டு (2 திமோ 4:7) லட்சகணக்கான மக்களுக்கு இயேசுவை

அறிவிக்கும் கருவியாகத் திகழ்ந்தார். இயேசுவின் சிலுவை அவருக்கு சோகத்தையல்ல சக்தியை அளித்தது.

          இத்தவக்கலத்தில் இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம், இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தையும் துக்கத்தையும் அளிக்கலாம். இயேசு பட்ட வேதனைகளை நினைத்து என் மனம் உருகலாம், இது பொதுவாக எல்லா கிறிஸ்துவர்களுக்கும் இருக்கும் ஒரு மனநிலை. ஆனால், வானகத் தந்தையின் மீட்ப்புத் திட்டத்தை நிறைவேற்ற இயேசு சிலுவையை தேர்ந்துகொண்டார், “என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படி செய்கிறேன்.” என்று இயேசு கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். (யோவா 10:18). இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட தடைகளான சாத்தானின் சோதனைகள், மனிதர்களின் சுயனல பல்வீனங்கள், போன்றவற்றை தகர்த்து சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டார், இயேசு.  அவருடைய பாதையில் நடக்கும் நாமும் புனித பவுல், புனித செபஸ்தியார், புனித அருளானந்தர், சமீபத்தில் முத்திபேறுபெற்ற சகோதரி ராணி மரியா போன்று நம்முடைய கிறிஸ்துவ சாட்சிய வாழ்வில் உறுதியோடிருக்கவும் இதனால் வரும் சிலுவைகளை தாங்கிகொள்ளவும் நாம் முன் வருவோம்.

          இன்று உலக் அளவிலும், இந்திய அளவிலும் கிறிஸ்துவர்களுகு எதிரான அடக்குமுறைகளும் அக்கிரமங்களும் அதிகரித்து வ்ருகின்றன. நம் நாட்டில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் ஜனனாயகம் படுகொலை செய்யப்படுவதும்; ஒரே நாடு, ஒரே சமயம் என்று கூறும் இந்துத்துவ சார்புடையோர்கள் சமய நல்லிணக்கத்திற்கு சாவு மணி அடிப்பதையும் இன்று நாம் காண்கிறோம். நமது மறைமாவட்டத்திலேயே மொழி, இனம், சமயம் என்பதில் சிறுபான்மையராக வாழ்கின்ற நம்

கிறிஸ்துவர்களுக்கு எத்தனை சோதனைகள் !  தேசிய அளவிலும் மாநில அளவிலும் கிறிஸ்துவர்கள் என்ற பெயரில் நாம் அனுபவிக்கின்ற சிலுவைகளை இயேசுவின் துணையோடு தாங்கிகொள்வோம். நம்மிடமிருக்கின்ற ஒரு சில சுயநல உணர்வுகளையும் கட்சிசார்பு பிரிவினைகளையும் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் சிலுவைக்கு பெருமைசேர்க்கும் வகையில் ஒற்றுமை என்ற சாட்சியவாழ்வை வெளிப்படுத்த முயல்வோம். நம்முடைய தீவினைகளை அகற்றி வாழ்வது இயேசுவின் சிலுவை பாடுகளை தாங்குகின்ற பெருமையை நாம் அடைவோம், அவருடைய சிலுவை பாதையில் நடந்து செல்வதற்க்கு தகுதிபெருவோம்.

           சகோதர சகோதரிகளே, இத்தகைய முறையில் இந்த தவக்கலத்தை நாம் மேற்கொள்ளும்போது உயிர்த்த ஆணடவரைக் கொண்டாடும் பாஸ்கா விழாவில் தகுதியோடு நாம் பங்கேற்க்க முடியும்.

 நீங்கள் எல்லோரும் இத் தவக்கால அருளை பெறவும், உயிர்த்த ஆண்டவரின்  சமாதானம் கிடைக்கவும் உங்களை வாழ்த்துகிறேன்.

 

உங்கள் ஆயர்

மேதகு. அந்தோணிசாமி பீட்டர் அபீர்

 சுல்தான்பேட் மறைமாவட்டம், பாலக்காடு

16 பிப்ரவரி 2018.