சுல்தான்பேட் மறைமாவட்ட மேதகு ஆயர் அவர்களின்தவக்கால மேய்ப்புப் பணி மடல்
ஞாயிறு, 17.03. 2019

அன்புமிக்க குருக்களே, துறவிகளே, சகோதர, சகோதரிகளே…

            நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைக் குறித்து தியானிக்கின்ற இந்தத் தவக்காலத்தில் அவருடைய அருளும் இரக்கமும் உங்களோடு இருப்பனவாக!

            இத்தவக்காலத்தில் “மனந்திரும்புங்கள், நற்செய்தியை நம்புங்கள்”(மாற்கு 1:15) என்று நம் எல்லாருக்கும் இயேசு விடுக்கின்ற அறைகூவலை நினைத்துப் பார்ப்போம். சாம்பல் பூசி நாம் இத்தவக்காலத்தை தொடங்குகிறோம். இச்சாம்பல் நமக்கு மனித வாழ்க்கையின் ஒன்றுமில்லாமையையும், இயலாமையையும் உணர்த்துகிறது. அதோடு நம்முடைய பாவநிலையையும் உணர்த்துகிறது. அதனால் தான் “நீ மண்ணாய் இருக்கிறாய், மண்ணிற்கே திரும்புவாய்” (தொ.நூ 3:19)   என்று தொடக்கத்திலேயே கடவுள் நமக்கு உணர்த்தினார்.

பணம், புகழ், அதிகாரம், செல்வாக்கு என்று எத்தனை ஆற்றல் கொண்டவர்களாக நாம் இருந்தாலும், “புல் உலர்ந்து போகும், பூ வதங்கி விடும்” (எசாயா 40:8) என்ற நிலையில் நம்முடைய வாழ்க்கை பலவீனமுள்ளது என்பதை இந்தத் தவக்காலம் நம்மை முதலில் எச்சரிக்கிறது.  அதனால் தான் “நாம் வாழ்வதும், இருப்பதும் இயங்குவதும் அவராலேதான்” (தி. பணி 17:28), என்ற உண்மையையும் நம் உள்ளத்தில் இருத்திக் கொள்ள புனித பவுல் அழைப்பு விடுக்கிறார்.

“எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள், மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக் 12:15) என்ற நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளையும் இந்தத் தவக்காலத்தில் தியானிக்க வேண்டும். அதனால் தான் இந்த செய்தியை நன்கு அறிந்த பேரரசனான தாவீது கூட , “ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு” (தி. பா 27:1) என்று நினைத்து வாழ்ந்தார். அதோடு “யாரிடம் செல்வோம் ஆண்டவரே வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம் தானே உள்ளது” (யோவான் 6:67) என்று  புனித பேதுரு இயேசுவை நோக்கிக் கூறினார். அதனால், நாம் பாவிகள் என்பதையும் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு, கடவுளின் இரக்கத்தையும் பிரசன்னத்தையும் நினைத்து வாழ்வது தான் நமது மனமாற்றத்திற்கான முதல்படி  ஆகும்.

உலகில் பிறக்கின்ற நாம் எல்லாரும் பாவம் என்ற தீமையால் தாக்கப்படும் நிலையில் இருக்கின்றோம். “உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன், உன் பார்வையில் தீயது செய்தேன்” (தி. பா51:4) என்று தாவீதும், “பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவனாக இருக்கிறேன்”   (உரோமை 7:14) என்று புனித பவுலும் பாவ அறிக்கை அளித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் நமது திருத்தந்தை பிரான்சிஸ் கூட, நாம் பலவிதமான பாவங்களுக்கும், சோதனைகளுக்கும் உட்பட்டவர்களாக இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார். (14 பிப்ரவரி 2018). இத்தைகயச்சூழலில் இருந்து நாம் விடுபட்டு, கடவுளின் பிள்ளைக்குரிய வாழ்க்கைக்கு நம்மையே மாற்றிக் கொள்ள இந்தத்தவக்காலம் அழைக்கிறது.

“மனமாற்றம்” என்ற வார்த்தைதான் இந்தத் தவக்காலத்தில் நாம்  அதிகம் கேட்கிறோம். ஊதாரி மைந்தன் தந்தைக்கு எதிராகவும் தன் குடும்பத்திற்கு எதிராகவும் பாவம் செய்தான். தவறு செய்து விட்டோமே என்று முதலில் வருந்தினான். தந்தையோடும் தன் குடும்பத்தோடும் ஒப்புரவாக்கிக்கொள்ள தன் பாவ நிலையை விட்டுவிட்டுத் திருந்தி, திரும்பி வந்தான், (லூக் 15:1…). அதேப்போன்று “சக்கேயுவே உன் வீட்டில் நான் தங்க வேண்டும்” என்று இயேசு கூறியவுடன், இயேசுவைத் தன் வீட்டிற்கு அழைக்கும் முன்பு, தன் பாவங்கள் அனைத்தையும் அறிக்கையிட்டு, மனம் திருந்தி, பாவப்பரிகாரம்  செய்வதற்கு முன்வந்தார் (லூக் 19:1-10). இத்தகைய மனநிலையோடு நம்முடைய தவறான போக்குகளைத் திருத்திக் கொண்டு, திருந்தி வாழ வேண்டும் என்பது தான் இயேசு விடுக்கும் தவக்கால முதன்மைச் செய்தி.

இந்தத் தவக்காலத்தில் ஆடம்பர உணவுகளையும், உடைகளையும் தவிர்ப்பது, ஒவ்வொரு நாளும் சிலுவைப் பாதை செய்வது, தவக்காலத் திருயாத்திரை மேற்கொள்ளுவது, குடிப்பழக்கம் போன்ற தவறான பழக்கங்களை விடுவது போன்ற தவமுயற்சிகளை இந்த நாற்பது நாட்களும் பலர் மேற்கொள்கின்றார்கள். இவையாவும் நம்முடைய முழுமையான ஆன்மீக மாற்றத்திற்கு உதவியாக இருந்தால் நல்லது. இறைவாக்கினர் யோவேல் கூறுவது போன்று, “உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம், இதயத்தை கிழித்துக் கொண்டு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” (யோவேல் 2:13) என்ற நற்செய்திக்கு ஏற்ப நம்முடைய தவ முயற்சிகள் அமைய வேண்டும். நம்முடைய செபமும், தவமும்  இந்த நாற்பது நாட்களோடு நின்றுவிடாமல், அதனுடைய தாக்கமானது நம்முடைய வாழ்வு முழுவதும் எதிரொலிப்பது முக்கியமானது.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே… கடவுளின் இரக்கத்தையும், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் இந்தத் தவக்காலம் நமக்கு அதிகம் உணர்த்துகிறது இயேசுவின் பாடுகளும் சிலுவை மரணமும் இதற்கு சாட்சியாகும். அந்த இயேசுவின் கருணை நமக்கு மனமாற்றத்திற்கான தூண்டுதல் கொடுக்கின்றது.  நம்முடைய தவறுகளில் இருந்து திருந்தி வாழ  கடவுள் நமக்கு கொடுக்கின்ற மிக முக்கியமான ஒரு அருளின் காலம் இது. நாம் திருந்தி வாழ வேண்டும் என்பது மட்டுமல்ல. நீதியும், நன்மைத்தனமும் கொண்டு வாழ வேண்டும் என்று பாடுகளின் இயேசு நம்மைத் தூண்டுகிறார்.

இன்றைய காலக்கட்டத்தில், நம் குடும்பத்திலும், சமூகத்திலும், அரசியலிலும், அரசாங்கத்திலும் கூட சுயநலம், ஊழல், தீவிரவாதம் போன்ற தீய சக்திகள் தலை விரித்து ஆடுவதை நாம் அறிவோம். நுகர்வு கலாச்சார தாக்கமும், T.V, செல்போன் போன்ற தொலைதொடர்பு சாதனங்களால் தீய தாக்கமும் நம்முடைய குடும்பத்தையும் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது என்பது நமக்கு தெரியும். தீவிர மதவாத கொள்கைகளும், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு என்ற போர்வையில் தேசியவாத தீவிரத்தன்மையும் தலைவிரித்து ஆடுவதையும் நம் நாட்டில் காண்கிறோம். இத்தீய சக்திகளால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்போடு இருக்க வேண்டும். தூய பேதுரு கூறுவது போன்று கர்ஜிக்கும் சிங்கம் போல் தீமைகள் பல வகைகளில் நம்மைத் தாக்கும் என்ற எதார்த்தத்தை மறந்து விடக்கூடாது. (1பேதுரு5:8). அதுமட்டுமல்லாமல் வறுமை, வேதனைகள், வியாதி போன்ற எந்தவொரு அவசூழ்நிலையிலும் மனம் தளர்ந்து விடாமல் இயேசுவின் சீடர் என்ற நிலையை இழந்து விடக்கூடாது.

நாம், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயேசுவின் துன்பச் சிலுவையை மட்டும் தாங்கிச் செல்லவில்லை, விடுதலைச் சிலுவையையும் நாம் சுமந்து செல்கிறோம் என்பதை அறிய வேண்டும். நம் குடும்பத்திலும், சமூகத்திலும் அக்கிரமங்களும், அநியாயங்களும் நடக்கின்ற சூழலைக் கண்டு ஒதுங்கி விடக்கூடாது. “மாசற்ற குழந்தைகளைப் போல “நாம் வாழவேண்டும் என்பது மட்டுமல்ல, உலகில் சுடர்களாக” (பிலிப்பியர்2:15) இருந்து நன்மைத்தனத்தை விதைப்பவர்களாக வாழ வேண்டும்.

நம் நாட்டின் தேர்தல்  காலத்தில் நாம் இப்போது இருக்கின்றோம் . நன்மைத் தனத்தின் தூதுவர்களாக நாம் இருக்கிறோம் என்பதை மனதில் பதித்துக் கொண்டு, நம்முடைய வாக்குகளை எந்த சுயநல போக்கில்லாமல், வாக்களிக்க வேண்டும் என்பது நமது கடமை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நம் நாட்டின் அரசியலமைப்பு அடிப்படை சட்டத்தை மதிப்பவர்களையும், நேர்மையும், சமூகநலனையும் கொண்டவர்களையும் சமய, கலாச்சார சுதந்திரத்தை மதிப்பவர்களையும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுது தான் நம் ……….. நாட்டின் வளர்ச்சியும், மனிதநேயமும் , மொழி, இனம், கலாச்சாரம், சமயம் போன்ற பல தரப்பட்ட நிலையில் வாழ்கின்ற இந்த இந்திய மக்களிடையே முன்னேற்றமும், மனித நேயமும் உருவாகும்.

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, மேலே குறிப்பிட்ட யாவும் தவக்கால மன்மாற்றத்திற்கான பல நிலைகள். இத்தகைய மன்மாற்றத்தை நாம் அடையும்போது இயேசு என்ற நற்செய்தியை நம்பி ஏற்று வாழ முடியும். நம்முடைய இந்த உலக போராட்டங்கள், சோதனைகள் வேதனைகள் மத்தியில் இயேசுவின் பாதையில் நடந்து செல்ல, அவருடைய மனநிலையில் அவரோடு சிலுவையைச்சுமந்து செல்ல நமது மனமாற்றமும், நன்மைத்தன வாழ்வும் உதவியாக உள்ளது. இத்தகைய நிலையில் நம்முடைய வாழ்க்கைப் பயணம் அமைந்தால் இயேசுவின் புதுவாழ்வு என்ற உயிர்ப்பில் பங்குபெற தகுதியாவோம். “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவிற்காகவே” (பிலிப்பியர்1:21), என்ற மனமாற்றத்தை இந்த தவக்காலம் நமக்கு அளிப்பதாக.

இந்த தவக்கால ஆசீரையும், உயிர்ப்பின் அருளையும், பாடுகளின் இயேசு வழியாக எல்லாம் வல்ல இறைவன் உங்கள் மேல் நிறைவாகப் பொழிவாராக .

 

உங்கள் ஆயர்

+ மேதகு அந்தோணிசாமி பீட்டர் அபீர்

 சுல்தான்பேட் மறைமாவட்டம், பாலக்காடு

14 மார்ச் 2019.

சுல்த்தான்பேட் மறைமாவட்ட மேதகு ஆயரின் 
தவக்கால மேய்ப்புப் பணி மடல்

16 பிப்ரவரி 2018

 

அன்பார்ந்த குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் தவக்கால அருளோடுகூடிய எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

மனமாற்றத்தின் காலமான தவக்கலத்தை நாம் துவங்கியிருக்கிறோம். இது செபத்தின் காலம், நோன்பின் காலம், இரக்கசெயல்களின் காலம். அத்துடன் கடந்த கால தவறுகள், பாவங்கள், பலவீனங்கள் போன்றவற்றை நினைத்துப்பார்த்து அவற்றுக்கான மனம்வருந்தும் காலமும் இதுதான். அதே நேரத்தில் நம் ஆணடவர் இயேசுவின் அடிச்சுவட்டில் நம்மை மேலும் அர்ப்பணித்துகொண்டு நம்பிக்கையோடு வாழும் மனநிலையை உண்டாக்கும் காலமும் இதுவே. இயேசுவின் அடிச்சுவட்டில் நடந்து நல்ல மனிதர்களாக நாம் வாழ இந்த தவக்கலத்தில் பலவிதமான செபம், தபம், நோன்பு-முயர்ச்சிகளையும் நாம் எடுப்பது வழக்கம். நம்முடைய இத்தகைய முயற்ச்சிகளில், “ நீங்கள் உங்கள் உடைகளை கிழித்துகொள்ள வேண்டாம் இதயத்தை கிழித்துகொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பிவாருங்கள்.” (யோவே 2:12) என்று இறைவாகினர் யோவேல் கூருவதை மனதில் கொள்ளவேண்டும்.

செபமும் நோன்பும்

இறைவனோடும் அதுவும் குறிப்பாக நம் ஆண்டவர் இயேசுவோடும் நம்மையே ஒன்றித்துகொள்வதற்க்கு செபம் நமக்கு உதவியாயுள்ளது. நாம் செய்கின்ற சிலுவைப்பாதையும் தியானமும் இயேசுவின் பாடுகளில் நம்மையே இணைத்துகொள்ள உதவுகிறது. நம்முடைய மனித எண்ணங்களும்

செயல்பாடுகளும் பொதுவாக தீமையை நோக்கி செல்கின்ற நிலையில்               ( தொ.நூ 6:5) நம்முடைய மனித மாண்பினை அதாவது கடவுளின் சாயலாக நாம் படைக்கப்பட்டிறிக்கின்ற மகத்துவத்தை செபத்தின் மூலம் பெற்றுகொள்கிறோம். நம்மிடம் ஊறிப்போயிருக்கின்ற பொய்யான நம்பிக்கைகளையும், பாவங்களையும் நாம் இத் தவக்கல செபத்தின் வழியாக போக்கிகொள்ள முடிகிறது. இதற்க்கு நாம் செய்கின்ற தொண்டுகள் உறுதுணையாய் இருக்கின்றன.

அன்பார்ந்தவர்களே ! நோன்பு பற்றிய கிறிஸ்துவின் போதனையை நாம் தெளிவுர அறிந்து கொள்வது அவசியம், நாம் விரும்புகின்ற அல்லது ஆடம்பரமாக தோற்றம் அளிக்கின்ற விருந்து, உடையலங்காரம் போன்றவற்றை தவிர்ப்பதையும் இன்னும் குறிப்பாக இறைச்சி மற்றும் மீன் போன்ற வகைகளை தவிர்ப்பதையும், பொதுவான உடையை தவிர்த்து காவியுடையை சிலர் உடுத்துவதையும் பொதுவாக நாம் நோன்பு என்று கருதுகிறோம். ஆனால், நோன்பின் முதல் கட்டமே அது! நோன்பின் வெளியடையாளங்களே இவை ! என்னுடைய உடலையும் உள்ளபோக்கினையும் ஒடுக்கிகொண்டு கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்க்கின்ற மனநிலைக்கு (கொலோ 1:24) நாம் செய்கின்ற நோன்பு இட்டுச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட நோன்புதான் நம்மிலிருக்கும் சுயநலம், அஹங்காரம் போன்ற தீய குணங்களை அகற்றுவதற்க்கு வழியாயுள்ளது என்று நமது திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டின் தவக்காலச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதை நினைவில் கொள்வோம். இதுதான் நோன்பின் இரண்டாம் கட்டம்.

          இந்தத் தவக்கலத்தில் நாம் செய்யவேண்டிய இரக்க செயல்கள் நோன்பின் மூன்றாவது கட்டமாகும். இரக்கசெயல்கள் என்றவுடன் தர்மம் செய்வதே

நம்முடைய கண்முன் நிற்க்கின்றது, உண்மைதான். இக்காலத்தில் தேவையிலிருப்போருக்கும், அவதிப்படுவோருக்கும் பொருளுதவியை தாராளமாக செய்ய முன்வருவோம். ஆனால் சகோதர சகோதரிகாளே, நம்முடைய இரக்கச் செயல்களில் மற்றொரு கோணமும் உண்டு. நம்முடைய பொருளுதவியைவிட பெரும்பாலான மக்கள் நம்மிடம் எதிர்பர்ப்பது நம்முடைய உறுதுணையும், ஆதரவான, ஒத்துழைப்பும், நாம் கொடுக்கும் ஊக்கமும்தான். நம்முடைய குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருசிலர் தனிமையிலும், கொடிய வியாதியிலும் வாழ்வார்கள். அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதும், தங்கள் குடும்பபிரட்சனைகளால் மன அழுத்தம் கொண்டு சிலர் நம்மிடையே வாழ்பவர்களுக்கு நாம் ஆறுதலாளிக்கும் மருந்தாகவும், உற்சாகமளிக்கும் நம்பிக்கையாக இருப்பதும் நம் தவக்கால செப நோன்பாகும்.

இயேசுவின் பாதையில் நாம்

சகோதர சகோதரிகளே, மேலே கூறப்பட்டுள்ள முறையில் நம்முடைய தவக்கால நோன்பு செபத்தை செய்யும்போது நாம் இயேசுவின் பாதையில் நிலைதடுமாறாமல் நடக்க வழியுண்டு. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யாரென்று நாம் கேட்டால் அவரே கூருகிறார், “நானே உலகின் ஒளி,” “நானே வழியும், வாழ்வும்” என்பது மட்டுமல்ல; மேற்கண்ட அனைத்தையும் உள்ளடக்கி புரிந்துகொள்ளும் முறையில், “நானே நல்ல ஆயன்” என்று கூறினார் (யோவா 10:11). ஏழைகள், சிறைபட்டோர், பார்வையற்றோர், ஒடுக்கப்பட்டோர், போன்றோருக்கு வாழ்வு அளிப்பவராகவும் (லூக் 4:18,19) தன்மேல் நம்பிக்கை கொண்டவர்களை எப்போதும் காப்பாற்றும் நல்ல ஆயனாகவும் இயேசு வாழ்ந்துகாட்டினார். மேலான மீட்பின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்து விளைச்சல்

அளிப்பதுபோல” (யோவா 12:24), ஒரு நல்ல ஆயனாக இருந்து தன் உயிரையே நமக்காக கையளித்து (யோவா 10:15), நமக்கு வாழ்வாக இன்று விளங்குகிறார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர் மேற்கொண்டது சிலுவைப்பாதை. அவர் எடுத்துகொண்டது சிலுவை மரம், அவர் அடைந்தது சிலுவை மரணம். ஆனால் அன்பார்ந்தவர்களே அவர் நமக்கு விட்டுசென்ற உயிர்ப்பு வாழ்வு இத்தகைய நம் மீட்பராம் இயேசுவின் சிலுவைப்பாதையில் நடக்க இந்த தவக்காலம் நம்மையும் அழைக்கிறது.

          சாத்தானின் பலவித தீய சக்திகளுக்கெதிராக போராடிய புனித பவுல், “நான் நன்மைசெய்ய விரும்பினாலும் என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது.” (உரோ 17:14,21). என்று கூறினார். இயேசுவில் மனித பலவீனத்திலும் பாவத்திற்கு அடிமையாகவும் வாழ்ந்த புனித பவுல் இயேசுவின் சிலுவைப்பாதையில் நடக்கத் துடங்கினார். யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருந்த சிலுவை அவருக்கு கடவுளின் வல்லமையாகவும் ஞானமாகவும் தோன்றியது (1 கொரி 1: 18,24). எனவே, அவர் இயேசுவை பற்றி போதிக்க துவங்கியபோது சிலுவையில் அறையுண்ட இயேசுவைத்தான் போதித்தார். இயேசுவின் சீடராக இருந்த காரணத்தினால் துன்புறுத்தப்பட்டார், அவமதிக்கப்பட்டார், பட்டினி,தாகம் ஆடையின்றியிருத்தல், பழிக்கப்படுதல் போன்ற பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இவை எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு தாங்கிகொண்டு, இயேசுவின் சிலுவைப்பாடுகளை தன் உடலில் தாங்கி வாழ்ந்தார் (கொலோ 1:23). எனவே இறுதிவரை தன் விசுவாசத்தை காத்துகொண்டு (2 திமோ 4:7) லட்சகணக்கான மக்களுக்கு இயேசுவை

அறிவிக்கும் கருவியாகத் திகழ்ந்தார். இயேசுவின் சிலுவை அவருக்கு சோகத்தையல்ல சக்தியை அளித்தது.

          இத்தவக்கலத்தில் இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம், இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தையும் துக்கத்தையும் அளிக்கலாம். இயேசு பட்ட வேதனைகளை நினைத்து என் மனம் உருகலாம், இது பொதுவாக எல்லா கிறிஸ்துவர்களுக்கும் இருக்கும் ஒரு மனநிலை. ஆனால், வானகத் தந்தையின் மீட்ப்புத் திட்டத்தை நிறைவேற்ற இயேசு சிலுவையை தேர்ந்துகொண்டார், “என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படி செய்கிறேன்.” என்று இயேசு கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். (யோவா 10:18). இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட தடைகளான சாத்தானின் சோதனைகள், மனிதர்களின் சுயனல பல்வீனங்கள், போன்றவற்றை தகர்த்து சிலுவை மரணத்தை ஏற்றுகொண்டார், இயேசு. அவருடைய பாதையில் நடக்கும் நாமும் புனித பவுல், புனித செபஸ்தியார், புனித அருளானந்தர், சமீபத்தில் முத்திபேறுபெற்ற சகோதரி ராணி மரியா போன்று நம்முடைய கிறிஸ்துவ சாட்சிய வாழ்வில் உறுதியோடிருக்கவும் இதனால் வரும் சிலுவைகளை தாங்கிகொள்ளவும் நாம் முன் வருவோம்.

          இன்று உலக் அளவிலும், இந்திய அளவிலும் கிறிஸ்துவர்களுகு எதிரான அடக்குமுறைகளும் அக்கிரமங்களும் அதிகரித்து வ்ருகின்றன. நம் நாட்டில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பெயரில் ஜனனாயகம் படுகொலை செய்யப்படுவதும்; ஒரே நாடு, ஒரே சமயம் என்று கூறும் இந்துத்துவ சார்புடையோர்கள் சமய நல்லிணக்கத்திற்கு சாவு மணி அடிப்பதையும் இன்று நாம் காண்கிறோம். நமது மறைமாவட்டத்திலேயே மொழி, இனம், சமயம் என்பதில் சிறுபான்மையராக வாழ்கின்ற நம்

கிறிஸ்துவர்களுக்கு எத்தனை சோதனைகள் ! தேசிய அளவிலும் மாநில அளவிலும் கிறிஸ்துவர்கள் என்ற பெயரில் நாம் அனுபவிக்கின்ற சிலுவைகளை இயேசுவின் துணையோடு தாங்கிகொள்வோம். நம்மிடமிருக்கின்ற ஒரு சில சுயநல உணர்வுகளையும் கட்சிசார்பு பிரிவினைகளையும் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் சிலுவைக்கு பெருமைசேர்க்கும் வகையில் ஒற்றுமை என்ற சாட்சியவாழ்வை வெளிப்படுத்த முயல்வோம். நம்முடைய தீவினைகளை அகற்றி வாழ்வது இயேசுவின் சிலுவை பாடுகளை தாங்குகின்ற பெருமையை நாம் அடைவோம், அவருடைய சிலுவை பாதையில் நடந்து செல்வதற்க்கு தகுதிபெருவோம்.

          சகோதர சகோதரிகளே, இத்தகைய முறையில் இந்த தவக்கலத்தை நாம் மேற்கொள்ளும்போது உயிர்த்த ஆணடவரைக் கொண்டாடும் பாஸ்கா விழாவில் தகுதியோடு நாம் பங்கேற்க்க முடியும்.

நீங்கள் எல்லோரும் இத் தவக்கால அருளை பெறவும், உயிர்த்த ஆண்டவரின் சமாதானம் கிடைக்கவும் உங்களை வாழ்த்துகிறேன்.

 

உங்கள் ஆயர்

                                       மேதகு அந்தோணிசாமி பீட்டர் அபீர்

                   சுல்தான்பேட் மறைமாவட்டம், பாலக்காடு

                                                                                                            .

 

சுல்தான்பேட் மறைமாவட்ட மேதகு ஆயரின்

தவக்கால மேய்ப்புப் பணி மடல் – 2017

 

அன்பார்ந்த குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் தவக்கால அருளோடுகூடிய எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கின்ற தவக்காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த தவக்காலம் நமக்கு அருளின் காலம், இறை ஆற்றலை நாம் அதிகமாக பெற்றுகொள்வதற்க்கான நோன்பின் காலம். நமது கடந்த கால தவறுகளை நினைத்து, அதிலிருந்து விடுதலை பெறுவதற்க்கான மீட்பின் காலம். இறை இரக்கத்தில் தொடர்ந்து வாழ முடியும் என்று இயேசுவின் நற்செய்தி நமக்கு அளிக்கும் நம்பிக்கையின் காலமும் இதுவே.

இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளை பற்றி நாம் அதிகமாக தியானிக்கிறோம். அவருடைய இணையற்ற துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைக்கும்போது நமக்கு மிகுந்த வருத்தம் ஏற்ப்படுகிறது. சிலுவைப் பாதையில் மட்டுமல்ல அவருடைய வாழ்க்கை முழுவதுமே பல எதிர்ப்புகளையும் துன்பங்களையும் இயேசு ஏற்றார். அதி உன்னத தெய்வ மகனான இயேசு, சாதாரண மனிதனைப்போல துன்பங்களை அனுபவித்தார். இதை நாம் தியானிக்கும்போது நமக்கு மிகுந்த வேதனை மட்டுமல்ல மனசஞ்சலமும் ஏற்ப்படுகிறது.

அன்பார்ந்தவர்களே, துன்பங்கள் எல்லாருக்குமே வேதனை அளிக்கிறது, மனதையும் உடலையும் வதைக்கிறது, இதனால் பதற்றமும், மனகுழப்பமும், வியாதிகள்கூட ஏற்ப்படுகின்றது. இந்த காரணங்களால் யாருமே துன்பங்களை விரும்புவதில்லை, உடலிற்க்கும் உள்ளத்திற்க்கும் வருத்தம் வரக்கூடாதே

என்று நாம் கவலைப்படுகின்றோம். துன்பத்தை பற்றி நினைக்கும்போது பழய ஏற்ப்பாட்டில் யோபு என்பவர் நம்முன் நிற்கின்றார்.    “எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; துன்பமே வந்துற்றது,” (யோபு 3:26) என்று அவர் தம் துயர வாழ்வை நினைத்து புலம்புவதை நாம் காண்கின்றோம். வாழ்வே துன்பமயம், இந்த துன்பத்திலிருந்து விடுதலையே இல்லை என்று புத்தமதம் கூருகிறது. ஆனால் சகோதர சகோதரிகளே, சிலுவையில் அறையுண்ட இயேசு நமக்கு தன் பாடுகளின் வழியாக நம்பிக்கை தரும் போதனையை அளிக்கின்றார். நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைபற்றி சற்றே சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். எல்லாம் வல்லவராகவும் இறைதன்மை கொண்டவராகவும் விளங்கிய இயேசு அதை முற்றிலும் துறந்து நம்மைபோல பலவீனமுள்ள மனிதனாக இந்த உலகத்தில் பிறந்து தாழ்நிலையை ஏற்றுக்கொண்டதை காண்கிறோம்.  தன் வாழ்வில் எதிற்க்கப்படும் அறிகுறியாக இவர் இருப்பார் என்று இயேசு குழந்தையாய் இருந்தபோதே சிமியோன் முன்னறிவித்தார். முதன்முறை நற்செய்தியை தனது ஊரான நசரேத்தில் போதித்தபோது “இவர் தச்சன் மகன் அல்லரோ,” என்று ஏளனமாக பேசினர் அந்த மக்கள். “நீதிமான்களை அல்ல பாவிகளையே அழைக்கவந்தேன்,” என்று கூறிய இயேசு நோயுற்றோருக்கு குணத்தையும், பசியுற்றோருக்கு உணவும், கவலையுற்றோருக்கு ஆறுதலும் அளித்து, நன்மை நிறைந்தவராகவே விளங்கினார், ஆனால் அன்பார்ந்தவர்களே சுயநலமும், அகங்காரமும் கொண்ட அன்றய யூத தலைவர்கள் அவரை தொடர்ந்து எதிர்த்தது மட்டுமல்ல கடைசியாக சிலுவை மரணத்தை பிலாத்து அவருக்கு அளிக்கவும் செய்தனர்; சுருங்கசொன்னால், இயேசுவின் 33 ஆண்டுகால இந்த உலக வாழ்வில் எந்த அளவுக்கு நன்மை நிறைந்தவராய் இருந்தாரோ அந்த அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்தார்.

இயேசு பட்ட பாடுகள் மிக கொடூரதன்மை கொண்டவை. தன் பாடுகளை முன்னமே அறிந்த இயேசு, மூன்று முறை முன்னறிவித்தார்.(மாற் 8:31; மத் 16:21; லூக் 9:22). பாடுகளின் கொடூர தன்மையை அறிந்த பேதுரு, இத்தகைய சிலுவை பாடுகளை இயேசு தவிர்க்க வேண்டுமென்று நினைத்த பேதுரு இயேசுவை தனியே அழைத்து கடிந்து கொண்டார். ஆனால் அது

கடவுளின் சித்தமல்ல என்பதை சுட்டிகாட்டிய இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார்.. ஏனென்றால், இயேசு எந்த தவறையும் செய்யாதவர், மனித பலவீனங்களுக்கு உட்படாதவர், மேலும், இயேசு தன் சொந்த தவறுகளுக்காக பாடுகளை ஏற்க்கவில்லை, பாவிகளாகிய நம்மை சாத்தானின் பிடியிலிருந்து விடிவிக்க ( லூக் 5:32) அவர் பாடுகள் பட்டு தன் உயிரை விலையாக கையளிக்கவேண்டும் (எபி 9:12,28) என்பது கடவுளின் திட்டம். மனிதனுடைய பாவங்களை தன்மீது சுமந்துகொண்டு, கொடிய மனிதருக்காக பரிந்துபேசும் துன்புரும் மெசியாவாக (எசா 53:12) அவர் தன்னையே கையளிக்கவேண்டும் என்பதும் கடவுளின் திட்டம். இதை உணர்ந்த இயேசு தனது நோக்கத்தில் உறுதியாக இருந்தார் (லூக் 9:22). இந்த உறுதிதான் இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது. நமக்காக பாடுகள் பட்டு தன்னையே மனமுவந்து கையளிப்பதை நாம் அவரது போதனைகளில் காண்கிறோம். அவர் தன்னை குறித்து பேசும்போது, “கோதுமை மணி மண்ணில் விழுந்து அழியாவிட்டால் அது அப்படியே இருக்கும்,” என்றார்; அதாவது அவர் மடிந்தால்தான் நமக்கு வாழ்வுண்டு என்று சுட்டிக்காட்டுகிறார்.

அன்பாந்தவர்களே, துன்பத்தை மனமுவந்து ஏற்க்கும் இயேசு, “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பரித்துக் கொள்வதில்லை, நானாகவே கொடுக்கிறேன்.” என்ற அவரது வார்த்தையில் அவரது மனநிலையை காண்கின்றோம். மேலும் தன் பாடுகளை பற்றி நினைத்த இயேசு, “தந்தையே இந்த நேரத்திலிருந்து என்னை காப்பாற்றும் என்பேனா? இல்லை இதற்க்காகத்தானே இந்நேரம்வரை காத்திருக்கிறேன்,” என்று கூறி நமக்காக தன் பாடுகளை ஏற்பதில் மன நிறைவை வெளிப்படுத்தினார். அன்பார்ந்தவர்களே, இயேசு நமக்காக துன்பங்களை ஏற்ப்பதற்க்கு காரணம்; பாவம் நிறைந்த மனிதர்களாகிய நம்மை மீட்பதர்க்காக. அத்தகைய கடினமான சிலுவைப் பாடுகளையும் இயேசு மனமுவந்து ஏற்றார் என்று நாம் அறிகின்றோம்.

 இயேசு வழியில் நாம்

நம்முடைய வாழ்வில் பல துன்பங்களை நாம் அனுபவிக்கின்றோம். நமது சொந்த தவறுகளுக்காகவும், பாவங்களுக்காகவும், பலவீனங்களுக்காகவும் நாம் துன்பங்களை அனுபவித்தால் அதில் நமக்கு பெருமை இல்லை; மாறாக கிறிஸ்துவர்களாக இருப்பதால் நாம் துன்புற்றால் அதுதான் நமக்கு பெருமை (2 பேது 4:15). “நான் உங்களுக்காக துன்புருவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்,” என்று கொலோசேய மக்களுக்கும் (கொலோ 1:24), பிலிப்பிய மக்களுக்கும் (பிலி 18:21) புனித பவுல் எழுதினார். இதற்க்கு காரணம்; இயேசுவை முன்னிட்டும், மக்களுக்கு இயேசுவை போதிக்கிற பணியை முன்னிட்டும் தான் துன்பப்படுவதை பெருமையாக கருதினார் புனித பவுல். அதேபோன்றுதான் நன்மைத்தனதிற்க்காக துன்பங்களை ஏற்று தங்கள் உயிரையும் கையளிப்பதில் புனித சந்தியாகப்பர், தோமையார் போன்ற அப்போஸ்தலர்களும், அந்தியோக்கிய இஞ்ஞாசியார் போன்றவர்களும் மற்றும் திருச்சபையின் பல வேதசாட்சிகளும் தங்கள் உயிரை கையளித்து மக்களின் நன்மைத்தனதிற்க்காக இயேசுவின் சாட்சியாக விளங்கினார்கள்.

தவக்காலத்தை புனித காலமாக அனுசரிக்கிற நாம் இயேசுவின் சிலுவைப்பாதையில் நாமும் அவரோடு நடந்து செல்ல வேண்டும். பல தவக்கால பக்தி முயற்ச்சிகளை நாம் மேற்கொள்வதன் மூலம் இயேசுவின் பாடுகளைபற்றி நாம் அதிகம் தியானிக்கமுடியும். இச்சூழலில் துன்பங்களை பற்றிய இயேசுவின் மனநிலையை நாம் பற்றிகொண்டு வாழ முயற்ச்சியெடுப்போம். அதாவது வருத்தம் விளைவிக்கக்கூடிய நமது சொந்த பாவங்களையும் பலவீனங்களையும் விட்டுவிடுவோம், அவற்றிற்க்காக மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வோம். அதே நேரத்தில் நல்லதொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்க்காக எடுக்கின்ற முயற்ச்சியில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை துணிந்து ஏற்ற இயேசுவை நமது தனிப்பட்ட முன்னேற்ற வாழ்விற்க்காகவும், குடும்பநலனுக்காகவும், சமூகத்தின் பொதுவான நன்மைதனத்திற்க்காகவும் நாம் முயற்ச்சிகள் எடுக்கும்போது

பலவிதமான சவால்களும் துன்பங்களும் நமக்கு வரும். பிள்ளைகளை பேனி வளர்ப்பதிலும் பெற்றோரை நல்ல முறையில் கவனிப்பதிலும் நமக்கு பலதுன்பங்கள் ஏற்ப்படுவதுண்டு, இந்த துன்பங்கள் எல்லாவற்றையும் நினைத்து நாம் சோர்வோடு முனுமுனுத்து புலம்பாமல், மனநிறைவோடு நாம் ஏற்று வாழவேண்டும். இன்னும் குறிப்பாக இந்த தவக்காலத்தில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், இதன்மூலம் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம். இந்த செயலையும் நாம் ஒரு தவ முயற்சியாக எடுத்து கொள்வோம். உண்மை, நேர்மை, உழைப்பு போன்ற நல்ல மனபான்மையில் கிறிஸ்துவர்களாக வாழுவோம். இதனால் நாம் பல சிலுவைகளை சந்திக்கவேண்டியிருக்கும்; அப்போதெல்லாம், “என் சீடனாக இருக்க விரும்புகிறவன் தன் சிலுவையை தினமும் சுமந்து பின்தொடரட்டும்.” (லுக் 9:23) என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுகொள்வோம். அப்போதுதான் இயேசுவின் சிலுவைபாதையில் அவருடைய சிலுவையைச் சுமந்த சீரேனே ஊர் சீமோனைப்போல இயேசுவின் சிலுவையை நாமும் தினமும் சுமக்கமுடியும். இப்படிப்பட்ட சிலுவை வாழ்வுதான் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற சாட்சிய வாழ்வு.

இத்தகைய சாட்சிய வாழ்வு வாழ சிலுவையில் அறையுண்ட இயேசு நம் எல்லாருக்கும் தவக்கால அருளை அளிக்கவும், உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் சமாதானமும் கிடைக்கவும் உங்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் ஆயர்

 

                                       மேதகு அந்தோணிசாமி பீட்டர் அபீர்

                   சுல்தான்பேட் மறைமாவட்டம், பாலக்காடு

03 மார்ச் 2017.