Pastrol Letters

 

 

சுல்தான்பேட் மறைமாவட்ட மேதகு ஆயரின்

தவக்கால மேய்ப்புப் பணி மடல் – 2017

 

அன்பார்ந்த குருக்களே, இருபால் துறவியரே, இறைமக்களே, உங்கள் அனைவருக்கும் தவக்கால அருளோடுகூடிய எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கின்ற தவக்காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த தவக்காலம் நமக்கு அருளின் காலம், இறை ஆற்றலை நாம் அதிகமாக பெற்றுகொள்வதற்க்கான நோன்பின் காலம். நமது கடந்த கால தவறுகளை நினைத்து, அதிலிருந்து விடுதலை பெறுவதற்க்கான மீட்பின் காலம். இறை இரக்கத்தில் தொடர்ந்து வாழ முடியும் என்று இயேசுவின் நற்செய்தி நமக்கு அளிக்கும் நம்பிக்கையின் காலமும் இதுவே.

இந்த தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளை பற்றி நாம் அதிகமாக தியானிக்கிறோம். அவருடைய இணையற்ற துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைக்கும்போது நமக்கு மிகுந்த வருத்தம் ஏற்ப்படுகிறது. சிலுவைப் பாதையில் மட்டுமல்ல அவருடைய வாழ்க்கை முழுவதுமே பல எதிர்ப்புகளையும் துன்பங்களையும் இயேசு ஏற்றார். அதி உன்னத தெய்வ மகனான இயேசு, சாதாரண மனிதனைப்போல துன்பங்களை அனுபவித்தார். இதை நாம் தியானிக்கும்போது நமக்கு மிகுந்த வேதனை மட்டுமல்ல மனசஞ்சலமும் ஏற்ப்படுகிறது.

அன்பார்ந்தவர்களே, துன்பங்கள் எல்லாருக்குமே வேதனை அளிக்கிறது, மனதையும் உடலையும் வதைக்கிறது, இதனால் பதற்றமும், மனகுழப்பமும், வியாதிகள்கூட ஏற்ப்படுகின்றது. இந்த காரணங்களால் யாருமே துன்பங்களை விரும்புவதில்லை, உடலிற்க்கும் உள்ளத்திற்க்கும் வருத்தம் வரக்கூடாதே

என்று நாம் கவலைப்படுகின்றோம். துன்பத்தை பற்றி நினைக்கும்போது பழய ஏற்ப்பாட்டில் யோபு என்பவர் நம்முன் நிற்கின்றார்.    “எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; துன்பமே வந்துற்றது,” (யோபு 3:26) என்று அவர் தம் துயர வாழ்வை நினைத்து புலம்புவதை நாம் காண்கின்றோம். வாழ்வே துன்பமயம், இந்த துன்பத்திலிருந்து விடுதலையே இல்லை என்று புத்தமதம் கூருகிறது. ஆனால் சகோதர சகோதரிகளே, சிலுவையில் அறையுண்ட இயேசு நமக்கு தன் பாடுகளின் வழியாக நம்பிக்கை தரும் போதனையை அளிக்கின்றார். நம் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைபற்றி சற்றே சிந்திக்க உங்களை அழைக்கின்றேன். எல்லாம் வல்லவராகவும் இறைதன்மை கொண்டவராகவும் விளங்கிய இயேசு அதை முற்றிலும் துறந்து நம்மைபோல பலவீனமுள்ள மனிதனாக இந்த உலகத்தில் பிறந்து தாழ்நிலையை ஏற்றுக்கொண்டதை காண்கிறோம்.  தன் வாழ்வில் எதிற்க்கப்படும் அறிகுறியாக இவர் இருப்பார் என்று இயேசு குழந்தையாய் இருந்தபோதே சிமியோன் முன்னறிவித்தார். முதன்முறை நற்செய்தியை தனது ஊரான நசரேத்தில் போதித்தபோது “இவர் தச்சன் மகன் அல்லரோ,” என்று ஏளனமாக பேசினர் அந்த மக்கள். “நீதிமான்களை அல்ல பாவிகளையே அழைக்கவந்தேன்,” என்று கூறிய இயேசு நோயுற்றோருக்கு குணத்தையும், பசியுற்றோருக்கு உணவும், கவலையுற்றோருக்கு ஆறுதலும் அளித்து, நன்மை நிறைந்தவராகவே விளங்கினார், ஆனால் அன்பார்ந்தவர்களே சுயநலமும், அகங்காரமும் கொண்ட அன்றய யூத தலைவர்கள் அவரை தொடர்ந்து எதிர்த்தது மட்டுமல்ல கடைசியாக சிலுவை மரணத்தை பிலாத்து அவருக்கு அளிக்கவும் செய்தனர்; சுருங்கசொன்னால், இயேசுவின் 33 ஆண்டுகால இந்த உலக வாழ்வில் எந்த அளவுக்கு நன்மை நிறைந்தவராய் இருந்தாரோ அந்த அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்தார்.

இயேசு பட்ட பாடுகள் மிக கொடூரதன்மை கொண்டவை. தன் பாடுகளை முன்னமே அறிந்த இயேசு, மூன்று முறை முன்னறிவித்தார்.(மாற் 8:31; மத் 16:21; லூக் 9:22). பாடுகளின் கொடூர தன்மையை அறிந்த பேதுரு, இத்தகைய சிலுவை பாடுகளை இயேசு தவிர்க்க வேண்டுமென்று நினைத்த பேதுரு இயேசுவை தனியே அழைத்து கடிந்து கொண்டார். ஆனால் அது

கடவுளின் சித்தமல்ல என்பதை சுட்டிகாட்டிய இயேசு பேதுருவை கடிந்து கொள்கிறார்.. ஏனென்றால், இயேசு எந்த தவறையும் செய்யாதவர், மனித பலவீனங்களுக்கு உட்படாதவர், மேலும், இயேசு தன் சொந்த தவறுகளுக்காக பாடுகளை ஏற்க்கவில்லை, பாவிகளாகிய நம்மை சாத்தானின் பிடியிலிருந்து விடிவிக்க ( லூக் 5:32) அவர் பாடுகள் பட்டு தன் உயிரை விலையாக கையளிக்கவேண்டும் (எபி 9:12,28) என்பது கடவுளின் திட்டம். மனிதனுடைய பாவங்களை தன்மீது சுமந்துகொண்டு, கொடிய மனிதருக்காக பரிந்துபேசும் துன்புரும் மெசியாவாக (எசா 53:12) அவர் தன்னையே கையளிக்கவேண்டும் என்பதும் கடவுளின் திட்டம். இதை உணர்ந்த இயேசு தனது நோக்கத்தில் உறுதியாக இருந்தார் (லூக் 9:22). இந்த உறுதிதான் இயேசு நம்மீது கொண்டுள்ள அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது. நமக்காக பாடுகள் பட்டு தன்னையே மனமுவந்து கையளிப்பதை நாம் அவரது போதனைகளில் காண்கிறோம். அவர் தன்னை குறித்து பேசும்போது, “கோதுமை மணி மண்ணில் விழுந்து அழியாவிட்டால் அது அப்படியே இருக்கும்,” என்றார்; அதாவது அவர் மடிந்தால்தான் நமக்கு வாழ்வுண்டு என்று சுட்டிக்காட்டுகிறார்.

அன்பாந்தவர்களே, துன்பத்தை மனமுவந்து ஏற்க்கும் இயேசு, “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பரித்துக் கொள்வதில்லை, நானாகவே கொடுக்கிறேன்.” என்ற அவரது வார்த்தையில் அவரது மனநிலையை காண்கின்றோம். மேலும் தன் பாடுகளை பற்றி நினைத்த இயேசு, “தந்தையே இந்த நேரத்திலிருந்து என்னை காப்பாற்றும் என்பேனா? இல்லை இதற்க்காகத்தானே இந்நேரம்வரை காத்திருக்கிறேன்,” என்று கூறி நமக்காக தன் பாடுகளை ஏற்பதில் மன நிறைவை வெளிப்படுத்தினார். அன்பார்ந்தவர்களே, இயேசு நமக்காக துன்பங்களை ஏற்ப்பதற்க்கு காரணம்; பாவம் நிறைந்த மனிதர்களாகிய நம்மை மீட்பதர்க்காக. அத்தகைய கடினமான சிலுவைப் பாடுகளையும் இயேசு மனமுவந்து ஏற்றார் என்று நாம் அறிகின்றோம்.

 இயேசு வழியில் நாம்

நம்முடைய வாழ்வில் பல துன்பங்களை நாம் அனுபவிக்கின்றோம். நமது சொந்த தவறுகளுக்காகவும், பாவங்களுக்காகவும், பலவீனங்களுக்காகவும் நாம் துன்பங்களை அனுபவித்தால் அதில் நமக்கு பெருமை இல்லை; மாறாக கிறிஸ்துவர்களாக இருப்பதால் நாம் துன்புற்றால் அதுதான் நமக்கு பெருமை (2 பேது 4:15). “நான் உங்களுக்காக துன்புருவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்,” என்று கொலோசேய மக்களுக்கும் (கொலோ 1:24), பிலிப்பிய மக்களுக்கும் (பிலி 18:21) புனித பவுல் எழுதினார். இதற்க்கு காரணம்; இயேசுவை முன்னிட்டும், மக்களுக்கு இயேசுவை போதிக்கிற பணியை முன்னிட்டும் தான் துன்பப்படுவதை பெருமையாக கருதினார் புனித பவுல். அதேபோன்றுதான் நன்மைத்தனதிற்க்காக துன்பங்களை ஏற்று தங்கள் உயிரையும் கையளிப்பதில் புனித சந்தியாகப்பர், தோமையார் போன்ற அப்போஸ்தலர்களும், அந்தியோக்கிய இஞ்ஞாசியார் போன்றவர்களும் மற்றும் திருச்சபையின் பல வேதசாட்சிகளும் தங்கள் உயிரை கையளித்து மக்களின் நன்மைத்தனதிற்க்காக இயேசுவின் சாட்சியாக விளங்கினார்கள்.

தவக்காலத்தை புனித காலமாக அனுசரிக்கிற நாம் இயேசுவின் சிலுவைப்பாதையில் நாமும் அவரோடு நடந்து செல்ல வேண்டும். பல தவக்கால பக்தி முயற்ச்சிகளை நாம் மேற்கொள்வதன் மூலம் இயேசுவின் பாடுகளைபற்றி நாம் அதிகம் தியானிக்கமுடியும். இச்சூழலில் துன்பங்களை பற்றிய இயேசுவின் மனநிலையை நாம் பற்றிகொண்டு வாழ முயற்ச்சியெடுப்போம். அதாவது வருத்தம் விளைவிக்கக்கூடிய நமது சொந்த பாவங்களையும் பலவீனங்களையும் விட்டுவிடுவோம், அவற்றிற்க்காக மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வோம். அதே நேரத்தில் நல்லதொரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்க்காக எடுக்கின்ற முயற்ச்சியில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை துணிந்து ஏற்ற இயேசுவை நமது தனிப்பட்ட முன்னேற்ற வாழ்விற்க்காகவும், குடும்பநலனுக்காகவும், சமூகத்தின் பொதுவான நன்மைதனத்திற்க்காகவும் நாம் முயற்ச்சிகள் எடுக்கும்போது

பலவிதமான சவால்களும் துன்பங்களும் நமக்கு வரும். பிள்ளைகளை பேனி வளர்ப்பதிலும் பெற்றோரை நல்ல முறையில் கவனிப்பதிலும் நமக்கு பலதுன்பங்கள் ஏற்ப்படுவதுண்டு, இந்த துன்பங்கள் எல்லாவற்றையும் நினைத்து நாம் சோர்வோடு முனுமுனுத்து புலம்பாமல், மனநிறைவோடு நாம் ஏற்று வாழவேண்டும். இன்னும் குறிப்பாக இந்த தவக்காலத்தில் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், இதன்மூலம் நமது சுற்றுச்சூழலை பாதுகாப்போம். இந்த செயலையும் நாம் ஒரு தவ முயற்சியாக எடுத்து கொள்வோம். உண்மை, நேர்மை, உழைப்பு போன்ற நல்ல மனபான்மையில் கிறிஸ்துவர்களாக வாழுவோம். இதனால் நாம் பல சிலுவைகளை சந்திக்கவேண்டியிருக்கும்; அப்போதெல்லாம், “என் சீடனாக இருக்க விரும்புகிறவன் தன் சிலுவையை தினமும் சுமந்து பின்தொடரட்டும்.” (லுக் 9:23) என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுகொள்வோம். அப்போதுதான் இயேசுவின் சிலுவைபாதையில் அவருடைய சிலுவையைச் சுமந்த சீரேனே ஊர் சீமோனைப்போல இயேசுவின் சிலுவையை நாமும் தினமும் சுமக்கமுடியும். இப்படிப்பட்ட சிலுவை வாழ்வுதான் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற சாட்சிய வாழ்வு.

இத்தகைய சாட்சிய வாழ்வு வாழ சிலுவையில் அறையுண்ட இயேசு நம் எல்லாருக்கும் தவக்கால அருளை அளிக்கவும், உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் சமாதானமும் கிடைக்கவும் உங்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் ஆயர்

 

                                       மேதகு அந்தோணிசாமி பீட்டர் அபீர்

                   சுல்தான்பேட் மறைமாவட்டம், பாலக்காடு

03 மார்ச் 2017.